பிரித்தானியா செல்லும் மாணவர்களைக் குறிவைத்து கேரளாவில் ஒரு மோசடி: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
சர்வதேச மாணவர்கள், மோசடியாளர்களின் இலக்காக மாறிவருவதை இந்தியாவின் கேரளாவில் இருந்து வரும் செய்திகள் உறுதிசெய்துள்ளன.
மாணவர்களைக் குறிவைத்து ஒரு மோசடி
உலகில் பல இடங்களில் மோசடியாளர்கள் உள்ளார்கள். சுற்றுலா செல்பவர்களிடம் மோசடி, வயதானவர்களிடம் மோசடி, பணத்தை அதிகரிக்கும் ஆசை உள்ளவர்களிடம் மோசடி, வீடு கட்ட விரும்புபவர்களிடம் மோசடி என, பல வகையில் மோசடி செய்தே வாழ்க்கையை நடத்தும் ஒரு கூட்டம் செயல்பட்டுக்கொண்டேதான் உள்ளது.
ஆனால், வாழ்வைத் துவங்கும் முன்பே இத்தகைய மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழக்கும் மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் எல்லோரையுமே சந்தேகத்துடன் பார்க்கும் ஒரு நிலையில்தானே அவர்கள் இருப்பார்கள்?
அப்படித்தான், பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் சிலர், தங்கள் ஊர் மக்களாலேயே ஏமாற்றப்பட்டுள்ளதைக் குறித்த ஒரு அதிரவைக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
பல லட்சங்கள் மோசடி
கடந்த செப்டம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் பலர், வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காரணம், அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணம் பல்கலைக்கு வந்து சேரவில்லை.
அதாவது, இந்த மாணவர்கள் கேரளாவில் உள்ள ஏஜன்சிகளில் கல்விக்கட்டணம் செலுத்தியுள்ளார்கள். அதற்கான ரசீதும் அவர்களிடம் உள்ளது. ஆனால், அவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி, பல்கலைக்கழகங்கள் அவர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளன.
பலர், முதல் ஆண்டுக் கல்வியைக் கூட முடிக்கமுடியாமல், படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை உருவாகியுள்ளது.
என்ன நடந்தது?
கேரளாவில் உள்ள சில ஏஜன்சிகள், மாணவர்களிடம், அவர்கள் கேரளாவிலேயே கல்விக்கட்டணத்தை செலுத்தினால், வரியோ, சேவைக் கட்டணமோ செலுத்தத் தேவையில்லை என கூறியதை நம்பி, மாணவர்கள் பலர் கல்விக் கட்டணம் செலுத்தியுள்ளனர். அதற்கான ரசீதும் அவர்களிடம் உள்ளது.
பிரித்தானியாவுக்குச் சென்ற பிறகு, அவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என பல்கலைக்கழகங்கள் கூற, மாணவர்கள் ரசீதை எடுத்துக் காட்ட, அவர்கள் கேரளாவில் எந்த ஏஜன்சிகளிடம் பணம் செலுத்தினார்களோ, அந்த ஏஜன்சிகள், தாங்கள் பல்கலைக்கு செலுத்திய பணத்தை அவர்களே திருப்பி எடுத்துக்கொண்டதாக பல்கலைகள் தெரிவித்துள்ளன.
ஆக, கல்விக்கட்டணமாக 3 முதல் 5 லட்ச ரூபாய் செலுத்திய மாணவர்கள், பணத்தையும் இழந்து, கல்வியையும் தொடர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
மிரட்டல் விடுத்த ஏஜன்சிகள்
சில மாணவ மாணவிகள் கேரளாவுக்குத் திரும்பி தாங்கள் பணம் செலுத்திய ஏஜண்டுகளைத் தேடினால், அவர்கள் தலைமறைவாகிவிட்டிருக்கிறார்கள். சிலரைக் கண்டுபிடித்து புகாரளிக்கச் சென்றால், அந்த மாணவர்களுக்கு மோசடியாளர்கள் மிரட்டல் விடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
தான் மோசடி செய்ததுடன், மோசடி செய்ததாக மாணவர்களை சிறைக்கு அனுப்பிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார் ஒரு ஏஜண்ட்.
மான்செஸ்டரில் சில மாணவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைக் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்ட செய்திகளைத் தொடர்ந்து, தற்போது அதேபோல பல மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதைக் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
இதுபோல, வரி செலுத்தத் தேவையில்லை, சேவைக் கட்டணம் கிடையாது என்று கூறும் மோசடியாளர்கள் யாரையும் நம்பி ஏமாறாமல், மாணவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு இந்த செய்தி ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |