மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம்
அமெரிக்காவின் மத்திய டெக்சாஸில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சேறு நிறைந்த ஆற்றங்கரைகள் வழியாகவும் விமானங்கள் ஊடாகவும் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் நான்காவது நாளாக தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.
28 குழந்தைகள்
திடீர் வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 80 உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. பெரும்பாலான இறப்புகள் டெக்சாஸ் மாகாணம் கெர்வில்லில் உள்ள ஆற்றங்கரை மலைப் பகுதியில் பதிவாகியுள்ளன, அங்கு 28 குழந்தைகள் உட்பட குறைந்தது 68 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுதந்திர தின விடுமுறைக்கு முந்தைய இரவில் தொடங்கி பெய்த பெருமழை, குவாடலூப் நதியை ஒரு சீற்றம் மிக்க, கொல்லும் பெருவெள்ளமாக மாற்றியது. அது கெர்வில்லே வழியாக நேரடியாகப் பாய்ந்து, பேரழிவை ஏற்படுத்தியது.
ஒரு மணி நேரத்திற்குள் நீர் வரத்து இரண்டு மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு உயர்ந்தது, பல சிறார் முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது, மரங்களை வேருடன் சாய்த்தது மற்றும் வாகனங்களை பொம்மைகளைப் போல தூக்கி வீசியது.
டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மாகாணம் முழுவதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், 41 பேர் காணாமல் போயுள்ளனர்.
மத்திய டெக்சாஸில், பத்து சிறுமிகள் மற்றும் சுமார் 750 பேர் தங்கியிருந்த ஆற்றங்கரை கிறிஸ்தவ கோடைக்கால முகாமைச் சேர்ந்த ஆலோசகர் உட்பட காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் சுமார் 17 ஹெலிகொப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளது.
அந்த முகம் மொத்தமாக சிதைந்துள்ளது. பெருவெள்ளத்தின் போது குவாடலூப் ஆற்றில் 20 மைல்கள் தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றினர்.
துர்நாற்றம் வீசத் தொடங்கியது
22 வயதுடைய அந்தப் பெண், தரையில் இருந்து பல அடி உயரத்தில் ஒரு சைப்ரஸ் மரத்தின் கிளைகளில் ஒட்டிக்கொண்டிருந்தார், வெள்ளம் அவருக்குக் கீழே பாய்ந்துகொண்டிருந்தது.
குவாடலூப் நதி தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது, ஆனால் டெக்சாஸில் இருந்து வெளிவரும் காட்சிகள் ஆற்றங்கரைகளில் எல்லா இடங்களிலும் முற்றிலும் சேதமடைந்துள்ளதைக் காட்டுகின்றன.
தண்ணீரிலிருந்து அடித்துச் செல்லப்பட்டு கொத்தாக இறந்த மீன்கள் கரைகளில் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. உயிர் தப்பியவர்கள் மற்றும் சடலங்களைத் தேடும் பணியில் ஹெலிகொப்டர்கள் இடைவிடாது பறந்த வண்ணம் உள்ளது.
தேசிய வானிலை சேவை முன்னறிவிப்புகளின் அடிப்படையில், மத்திய டெக்சாஸின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாகாண அவசரநிலை மேலாண்மை அதிகாரிகள் வியாழக்கிழமை எச்சரித்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |