உலகின் இளம் வயது கோடீஸ்வரர்களான 22 வயது நண்பர்கள்
மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க் சாதனையை முறியடித்து, வெறும் 22 வயதில் சுயமாக உருவான கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் பாடசாலை நண்பர்கள் மூவர்.
சொத்து மதிப்பு பில்லியன் டொலர்
மார்க் ஜுக்கர்பெர்க் தனது 23 ஆம் வயதில் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்தார். ஆனால் Mercor நிறுவனர்களான பிரெண்டன் ஃபுடி, ஆதர்ஷ் ஹிரேமத் மற்றும் சூர்யா மிதா ஆகியோர் அந்த சாதனையை முறியடித்துள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து செயல்படும் Mercor நிறுவனம் சமீபத்தில் 350 மில்லியன் டொலர் நிதியை திரட்டியது, இதன் மூலம் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே, Mercor நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரெண்டன் ஃபுடி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆதர்ஷ் ஹிரேமத் மற்றும் நிறுவனத்தின் தலைவர் சூர்யா மிதா ஆகியோரை உலகின் இளம் வயது சுயமாக உருவான கோடீஸ்வரர்கள் என மாற்றியுள்ளது.
அத்துடன், இளம் வயதில் சொத்து மதிப்பு பில்லியன் டொலர் இலக்கைக் கடந்தவர்கள் பட்டியலிலும் நண்பர்கள் மூவரும் இணைந்துள்ளனர்.
ஆதர்ஷ் ஹிரேமத் மற்றும் சூர்யா மிதா ஆகிய இருவரும் இந்திய- அமெரிக்கர்கள். இருவரும் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள அனைத்து ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர்கள்.

இந்திய வம்சாவளி
ஒரே ஆண்டில் மூன்று தேசிய கொள்கை விவாதப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற வரலாற்றில் முதல் ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றனர்.
சூர்யா மிதாவின் பெற்றோர் டெல்லியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். இந்திய வம்சாவளி ஆதர்ஷ் ஹிரேமத் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்க முடிவு செய்து, அங்கிருந்து இரண்டே ஆண்டுகளில் வெளியேறினார்.

அதேவேளை மிதா ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டுப் படிப்பில் இளங்கலைப் பட்டம் படித்து வந்தார். பிரெண்டன் ஃபுடியும் ஜார்ஜ்டவுனில் பொருளாதாரம் படித்து வந்தார்.
ஹார்வார்டில் இருந்து ஹிரேமத் வெளியேறிய அதே நேரத்தில் ஜார்ஜ்டவுனில் இருந்து நண்பர்கள் இருவரும் படிப்பை கைவிட்டுள்ளனர். இந்த நிலையிலேயே மூவரும் இணைந்து Mercor நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |