17 வயது மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை! ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு
தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர்.
அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை குறித்து விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் மாணவி தற்கொலை குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை உலுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.