உயிருக்கு ஆபத்தான விளையாட்டு: சுவிஸ் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் மூச்சைத்திணறடிக்கும் ஆபத்தான விளையாட்டு ஒன்று மாணவர்களிடையே பரவலாகி வருவது தொடர்பில் குறித்த பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை எச்சரித்துள்ளது.
சுவிஸின் நிட்வால்டன் மாநிலத்தின் Wolfenschiessen கிராமப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி நிர்வாகமே பெற்றோர்களை குறித்த ஆபத்தான விளையாட்டு தொடர்பில் எச்சரித்துள்ளது.
இளையோர்கள் அந்த விளையாட்டின் ஆபத்து தொடர்பில் கவலை கொள்வதில்லை என்றே தெரிய வருவதாக ஊடக கல்வியாளர் Joachim Zahn தெரிவித்துள்ளார்.
மூச்சைத்திணறடிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டானது இத்தாலியில் பல சிறார்கள் காயம்பட காரணமானதுடன் 10 வயது சிறுமியின் உயிரையும் பறித்துள்ளது.
இந்த நிலையிலேயே, வெள்ளிக்கிழமை நிட்வால்டன் பள்ளிகள் நிர்வாகம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல சிறார்கள் காயம்பட்டுள்ள தகவல் வெளியான நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த ஆபத்தான விளையாட்டு மாணவர்களிடையே பரவலாகி வருவதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விளையாட்டால் மூளையில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் பள்ளி நிர்வாக ஆதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்களே தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.