அவள் இதய துடிப்பு சீராகவில்லை! கூடவே இருந்தேன்... பிரித்தானியாவில் 15 வயது மகளை பறிகொடுத்த வலியுடன் பேசிய தாயார்
பிரித்தானியாவை சேர்ந்த 15 வயது சிறுமி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவிருந்த அதே நாளில் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளார்.
போர்ட்ஸ்மவுத்தை சேர்ந்தவர் ஜோர்ஜா ஹாலிடே (15). இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பெருந்தொற்று பாதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் ஜோர்ஜா உயிரிழந்துள்ளார். அதிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடிவு செய்திருந்த நாளிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது தான் பெரும் சோகம்.
பள்ளி மாணவியான ஜோர்ஜா குத்துச்சண்டை மற்றும் இசையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஜோர்ஜாவின் தாயார் டிரேசி ஹாலிடே கூறுகையில், அவள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள், ஜோர்ஜா வெளியே சென்று தன் நண்பர்களுடன் நேரத்தை செலவிட விரும்பினாள், அவளுடைய சகோதர சகோதரிகளுடன் நேரத்தை செலவிட விரும்பினாள்.
அனைவருக்கும் உதவுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். திடீரென சளி மற்றும் காய்ச்சல் ஜோர்ஜாவுக்கு ஏற்பட்டது, பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டாள்.
ஆனால் உணவு எதையும் விழுங்க முடியாதபடி அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்தோம். நான் ஜோர்ஜாவுடன் முழு நேரமும் இருந்தேன். சிகிச்சையின் போது இதயத் துடிப்பு சீராகவில்லை. அவளுடைய இதயத்தால் மன அழுத்தத்தை எடுக்க முடியவில்லை.
மருத்துவ ரீதியாக எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு வேலை செய்தனர், ஆனால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.