பிரித்தானியாவில் மார்ச் மாதத்தில் பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடுகளை விரைவுபடுத்த போரிஸ் ஜான்சன் உத்தரவு
கொரோனா பாதிப்பின் அளவு வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் மார்ச் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசு அதன் தடுப்பூசி திட்டத்தில் 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வரும் பிப்ரவரி 15 -ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்தும் இலக்கை நோக்கி சரியான வேகத்தில் செயல்பட்டுவருகிறது.
அதனைத் தொடர்ந்து, 65 முதல் 69 வயதுக்கு உட்பட்ட கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அழைப்பு கடிதங்கள் அடுத்தவாரம் அனுப்பப்படவுள்ளன.
இதன் அடிப்படையில், பிரித்தானிய அரசு அதன் கொரோனா ஒழிப்பு திட்டத்தில் சரியான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், அதற்கேற்ப இரண்டு வாரங்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பிரித்தானியாவின் தலைமை சுகாதார அதிகாரி கிறிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பள்ளிகளை விரைவில் திறப்பது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் 8-ஆம் திகதியிலிருந்து பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை விரைவுபடுத்த போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகள் தவறவிட்ட படிப்புகளை முறையாக தொடங்குவதற்கான புதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்.