பிரித்தானியாவில் நாளை பள்ளிகள் திறப்பு! மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்
பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திங்களன்று திறக்கத் தயாராகி வருவதால், நாடு இயல்பை நோக்கி நகரத் தொடங்குகிறது என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
மேலும், பூட்டுதலை எளிதாக்குவதற்கு அரசாங்கம் ஒரு 'எச்சரிக்கையான' அணுகுமுறையைப் பின்பற்றுவதால், விதிகளை கடைபிடிக்குமாறு பிரதமர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய உரடங்கிலிருந்து வெளியே வருவதற்கான திட்டத்தின் (Roadmap) முதல் படியாக திங்கட்கிழமை அமையவுள்ளது என அவர் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களும் மார்ச் 8-ஆம் திகதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்பலாம், வருகைப் பதிவு கட்டாயமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், யாரும் சரியான காரணமின்றி வகுப்புகளைத் தவறவிடக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 57 மில்லியன் கொரோனா சோதனை கருவிகள் ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பள்ளியின் முதல் இரண்டு வாரங்களில் மாணவர்கள் மூன்று முறை சோதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் வீட்டில் பயன்படுத்த ஒவ்வொரு வாரமும் இரண்டு சோதனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

