இன்று முதல் மீளவும் பாடசாலைகள் ஆரம்பம்!
நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுகின்றன. இது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட் பரவல் காரணமாக நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாட்டில் கோவிட் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, இன்று முதல் 4 கட்டங்களாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
அந்த வகையில், 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன.
இதனிடையே, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.
முச்சக்கரவண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும், அதேபோன்று வானில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், இந்த எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருப்பது கட்டாயமாகும். இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதேவேளை, இதேவேளை, சம்பள முரண்பாட்டு பிரச்சினை போராட்டம் காரணமாக, இன்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அந்த முன்னணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.