உருமாறிய கொரோனா... எச்சரித்த பிரதமர் ஜோன்சன்: பிரித்தானிய விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு
ஊடகத்தினருடனான சந்திப்பில் பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் கண்ட கொரோனா மிகவும் ஆபத்தானது என தெரிவித்த பிரதமர் ஜோன்சனுக்கு ஆய்வாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனா இறப்பு உச்சம் தொடும் நிலையில், உருமாறிய வீரியம் மிக்க கொரோனாவே இதற்கு காரணம் என பிரதமர் ஜோன்சன் ஊடகவியலாளர்கள் சந்திபில் தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரதமர் ஜோன்சனின் கருத்தை ஏற்க முடியாது என பிரித்தானிய தொற்றுநோய் ஆய்வாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உருமாறிய கொரோனா தொடர்பில் பல்வேறுகட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் உருமாறிய கொரோனாவால் அதிக மரணம் ஏற்படுவதாக கூறுவதை மொத்தமாக ஏற்க முடியாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாதிப்பே, புதிய வீரியம் மிக்க கொரோனாவால் ஏற்பட்டுள்ளது என கூறும் ஆய்வாளர்கள், அது தொடர்பில் இறுதி முடிவுக்கு இப்போதே வருவது முறையல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு பின்னரே, உருமாற்றம் கண்ட கொரோனா தொடர்பில் உறுதியான ஒரு முடிவுக்கு எட்ட முடியும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.
பிரித்தானியாவில் உருமாற்றம் கண்ட புதிய கொரோனா தொற்றானது முந்தைய தொற்றை விடவும் 30 முதல் 70 சதவீதம் வீரியம் கொண்டது எனவும், விரைவாக பரவும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.