மீண்டும் அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்திய ரொனால்டோ
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
போர்த்துகலின் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி இருந்தார்.
அதன்பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். அந்த அணிக்காக சுமார் 9 ஆண்டுகள் விளையாடினார். தொடர்ந்து 2018ல் இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு சென்றார்.
தற்போது மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பியுள்ளார். இன்று நியூகேஸில் அணிக்கெதிராக முதன்முறையாக களம் இறங்கிய ரொனால்டோ, முதல் போட்டியிலேயே இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.
இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் ரொனால்டோ (45+2), 62 நிமிடங்களில் கோல்கள் அடித்து ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு ஓல்ட் டிராஃபோர்ட் அரங்கத்திற்கு தாம் திரும்பியுள்ளதை போர்த்துகலின் உச்ச நட்சத்திரம் ரொனால்டோ இரட்டை கோல்களுடன் கொண்டாடியுள்ளார்.