T20 உலக கிண்ணத்தில் இடம்பெறும் ஸ்காட்லாந்து - வங்கதேச கிரிக்கெட் அணிக்கு ரூ.240 கோடி இழப்பு
T20 உலக கிண்ண தொடரில் இருந்து வங்கதேச அணி விலகியுள்ளதால் ரூ.240 கோடி இழப்பை சந்திக்க உள்ளது.
T20 உலக கிண்ணத்தில் ஸ்காட்லாந்து
வங்கதேசத்தில் தொடர்ச்சியாக இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) ஐபிஎல் மினி ஏலத்தில் KKR அணி வாங்கிய நிலையில், அரசியல் அழுத்தம் காரணமாக KKR அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு பதிலடியாக நடைபெற உள்ள T20 உலகக்கிண்ண தொடருக்கு இந்தியாவில் வந்து விளையாட மாட்டோம் வங்கதேச போட்டிகளை வேறு இடத்தில் நடத்த வேண்டுமென்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.

அதற்கு ஐசிசி மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவிற்கு வந்து விளையாட முடியாது என்பதால், T20 உலக கிண்ண தொடரை புறக்கணிக்கும் முடிவில் இருந்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
இந்த நிலையில், வங்கதேச அணிக்கு பதிலாக ஐசிசி தரவரிசையில் உலக கிண்ணத்திற்கு இடம்பெறாத அணிகளில் முதலாவதாக உள்ள ஸ்காட்லாந்து அணி T20 உலக கிண்ண தொடரில் இடம் பிடித்துள்ளது.

ஸ்காட்லாந்து அணி ஏற்கனவே 5 முறை டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளது. இந்த உலக கிண்ண தொடரில் சி பிரிவில் இடம்பெறும் ஸ்காட்லாந்து அணி, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இத்தாலி மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் தகுதி சுற்றில் மோத உள்ளது.
2026 ஐசிசி T20 உலகக்கோப்பை, பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
ரூ.240 கோடி இழப்பு
அதேவேளையில், T20 உலக கிண்ணத்தில் இருந்து விலகுவதால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் சுமார் ரூ.240 கோடி இழப்பை சந்திக்கும் என கருதப்படுகிறது.

ஐசிசி மூலம் ஆண்டுதோறும் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் வருவாய் பங்கிீட்டில் வங்கதேசத்திற்கு கிடைக்க வேண்டிய தொகை நிறுத்தப்படலாம்.
மேலும், ஒளிபரப்பு வருவாய், ஸ்பான்சர்ஷிப் வருவாய் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பு என ஆண்டு வருமானத்தில் சுமார் 60 சதவீதத்தை இழக்க நேரிடும்.
மேலும், இதன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேசத்தில் இந்திய அணி விளையாடுவதாக இருந்த இரு தரப்பு தொடர் ரத்தாகும் சூழல் உள்ளது.

ஒளிபரப்பு உரிமத்தில், இந்தியாவின் ஒரு தொடர் மற்ற அணிகளின் 10 தொடருக்கு சமம் என்பதால் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் உள்ளது.
ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடுவதற்கு வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் குறைந்தது 2.5 லட்சம் டாக்கா (வங்கதேச நாணயம்) (சுமார் ரூ.18 லட்சம்) ஊதியமாகப் பெறுகிறார்கள்.
T20 உலக கிண்ண தொடரில் விளையாடியிருந்தால் வங்கதேச வீரர்கள் என்ன ஊதியம் பெற்றிருப்பார்களோ அந்த ஊதியத்தை வழங்குவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |