4 வயது சிறுமி மாயமானதில் நீடிக்கும் மர்மம்... கண்ணீரில் குடும்பம்: விழி பிதுங்கும் அதிகாரிகள்
மேற்கு அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் மாயமான 4 வயது சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்து நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கார்னர்வோன் நகருக்கு வடக்கே Macleod பகுதியில் கூடாரம் அமைத்து விடுமுறையை கழித்து வந்த தம்பதியே தங்களின் 4 வயது மகள் மாயமானதாக கூறி அவசர உதவிக்குழுவினர் மற்றும் பொலிசாரின் உதவியை நாடியவர்கள்.
இதனையடுத்து கடந்த நான்கு நாட்களாக பொலிசார் மற்றும் அவசர உதவிக்குழுவினர் கிளியோ ஸ்மித் என்ற அந்த 4 வயது சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய மேற்கு கடற்கரையில் பலத்த மழை மற்றும் கடுமையான காற்று வீச, தேடுதல் பணிகளை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நான்காவது நாளாக பகல் 11.30 மணியளவில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.
இதுவரை சிறுமி தொடர்பில் உறுதியான எந்த தகவலும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. மேலும், சிறுமி மாயமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறு குடில்களின் உரிமையாளர்களிடம் அதன் சாவிகளை கோரியுள்ளதாகவும், அதன் பிறகு குடில்களுக்குள் சோதனை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை சுமார் 1.30 மணியளவில் தங்களின் கூடாரத்தில் கடைசியாக சிறுமி கிளியோவை பார்த்துள்ளதாகவும், ஆனால் 6 மணி காலையில் தாங்கள் கண் விழித்து பார்க்கும் போது சிறுமி காணாமல் போயிருந்தார் என பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களால் இயன்ற அளவில் சிறுமியை தேடியதாகவும், அதன் பின்னரே பொலிசாருக்கும் அவசர உதவிக்குழுவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளதகாவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அவுஸ்திரேலியா முழுமையும் சிறுமி தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடக பக்கங்களில் தகவல் பதிவிடப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நான்கு நாட்களாக எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், சிறுமி கிளியோ கடத்தப்பட்டிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.