பிரித்தானிய உள்துறைச் செயலர் லீக் செய்த இரகசிய தகவல் வெளியானது: அவரை மீண்டும் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தல்
பிரித்தானிய உள்துறைச் செயலர் லீக் செய்த இரகசிய ஆவணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரை மீண்டும் பதவிநீக்கம் செய்ய பிரதமர் ரிஷிக்கு கோரிக்கைகள் வலுக்கின்றன.
பிரித்தானிய உள்துறைச் செயலர் லீக் செய்த இரகசிய ஆவணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் அவரை பதவிநீக்கம் செய்ய பிரதமர் ரிஷிக்கு கோரிக்கைகள் வலுக்கின்றன.
லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் உள்துறைச் செயலராக இருந்த சுவெல்லா பிரேவர்மேன், தான் புலம்பெயர்தல் தொடர்பான ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை தனது தனிப்பட்ட மின்னஞ்சலிலிருந்து தனது நாடாளுமன்ற சக உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பியதாகவும், பின்னர் தான் செய்தது தவறு என தான் உணர்ந்ததால், தான் செய்த தவறுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், ரிஷி பிரதமரானதும், மீண்டும் சுவெல்லாவை உள்துறைச் செயலராக்கியுள்ளார்.
இந்நிலையில், சுவெல்லா தவறுதலாக அனுப்பிய ஆவணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, லிஸ் ட்ரஸ் பிரதமரானதும், பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு திட்டம் வைத்திருந்தாராம். அது என்னவென்றால், ஆயிரக்கணக்கான திறமை மிக்க தகவல் தொழில்நுட்பத் துறையினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் அறிவியலாளர்களை வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர உதவி, அவர்கள் மூலம் பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்க லிஸ் ட்ரஸ் திட்டமிட்டிருந்திருக்கிறார்.
ஆனால், சுவெல்லா உள்துறைச் செயலராக பதவியேற்றதுமே புலம்பெயர்தலுக்கு எதிராகத்தான் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கள் கடுமையாகவும் இருந்தன. ஆகவே, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக் கொண்ட சுவெல்லாவுக்கு, புலம்பெயர்தலை ஆதரிக்கத் திட்டமிட்டிருந்த லிஸ் ட்ரஸ்ஸின் திட்டம் பிடிக்கவில்லை.
அது குறித்து சில முக்கிய நபர்களை எச்சரிப்பதற்காகத்தான் அது தொடர்பான இரகசிய ஆவணம் ஒன்றை அனுப்ப முயன்ற சுவெல்லா, தவறுதலாக சம்பந்தமில்லாத யாரோ ஒருவருக்கு அந்த ஆவணத்தை அனுப்பிவிட்டார். அதனால்தான் அவரது பதவி விலக நேர்ந்தது.
இப்போது புதிதாக பிரதமராகியுள்ள ரிஷியும் புலம்பெயர்தலுக்கு ஆதரவாக இருப்பதுபோலவே உள்ளது அவரது சமீபத்திய நடவடிகைகள். எனவே, புலம்பெயர்தல் தொடர்பில் பிரதமருக்கும் உள்துறைச் செயலருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சுவெல்லா வெளியிட்ட இரகசிய ஆவணம் என்ன என்பதும் தெரியவந்துள்ளதையடுத்து, சுவெல்லாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் என ரிஷிக்கு கோரிக்கைகள் வலுக்கத் துவங்கியுள்ளன.
புலம்பெயர்தல் ஆவணத்தை லீக் செய்தது போக, பிரித்தானிய உளவுத்துறை தொடர்பான ஆவணம் ஒன்று லீக் ஆனதிலும் சுவெல்லாவுக்கு தொடர்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் சுவெல்லாவால் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுவெல்லாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.