சென்ற இடங்கள் எல்லாம் பெண்ணை பின்தொடர்ந்து இரகசியமாக வீடியோ எடுத்த நபர்: ஒரு வித்தியாசமான வழக்கு
கனேடிய பெண் ஒருவரை, அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று இரகசியமாக வீடியோ எடுத்துள்ளார் ஒருவர். அவர், ஒரு காப்பீட்டு நிறுவன ஊழியர்.
நடந்தது என்னவென்றால், Alicia Micallef என்ற அந்த பெண்ணுக்கு தலையில் அடிபட்டதால் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் காப்பீடு கிளைம் செய்துள்ளார்.
அவர் பொய் சொல்கிறாரா என்பதை அறிவதற்காக, Alicia சென்ற இடங்களுக்கெல்லாம் காப்பீட்டு நிறுவன ஊழியர் ஒருவர் அவரை பின்தொடர்ந்துள்ளார்.
அவர்கள் என் வீட்டுக்கு வெளியே மறைந்து நின்றுகொண்டு நான் என் பூனையிடம் என்ன பேசுகிறேன் என்பதைக் கூட ஒற்றுக்கேட்டார்கள், மளிகைக் கடைக்கு சென்றால் அங்கும் வந்திருக்கிறார்கள், மருத்துவரைக் காணச் சென்றால், அங்கும் வந்திருக்கிறார்கள் என்கிறார் Alicia.
ஏமாற்றுவதை தவிர்ப்பதற்காக இப்படி செய்வது சகஜம்தான் என்கிறார்கள் காப்பீட்டு நிறுவனத்தார்.
ஆனால், பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்காடும் சட்டத்தரணி ஒருவர், காப்பீட்டு பொதுவாக மக்களை அவமானப்படுத்தி, அவர்கள் காப்பீடு கிளைம் செய்வதையே நிறுத்துவதற்காகத்தான் இப்படி செய்வது வழக்கம் என்கிறார்.
நல்ல வேளையாக, வழக்கை விசாரித்த ஒன்ராறியோ நீதிமன்றம், Alicia மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்தது.
மருத்துவர்கள் அளித்த ஆதாரங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், இரகசியமாக வீடியோ எடுத்த காப்பீட்டு நிறுவனத்தை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இது ஒருவரின் தனியுரிமையை கடுமையாக மீறும் விடயம் என விமர்சித்த நீதிபதி, Aliciaவை சந்திக்காமலே, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்த காப்பீட்டு நிறுவனத்தின் மருத்துவரை வன்மையாக கண்டித்தார்.
ஒருவேளை காப்பீட்டு நிறுவனத்தின் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருந்து Alicia மோசடி செய்ததாக தீர்ப்பளித்திருந்தால், அவர் சிறை செல்ல நேரிட்டிருக்கலாம்.
அத்துடன், அவருக்கு 25,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அந்த காப்பீட்டு நிறுவனம் ஏற்படுத்திய மன அழுத்தம் இன்னமும் தன்னை பாதிப்பதாக தெரிவிக்கும் Alicia, யாரவது தனக்கு பின்னால் நடந்துவந்தால் கூட, அவர்களுக்கு வழிவிட்டு, அவர்கள் போன பிறகே தான் நடக்கும் அளவுக்கு தன் மன நிலை மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்.