ரஷ்யாவுக்காக உளவு பார்க்கவில்லை: அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த பிரித்தானியர்
ஜேர்மனியில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றிய பிரித்தானியர், ரஷ்யாவுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
டேவிட் ஸ்மித் (David Smith) எனும் 57 வயதாகும் அவர், 'ரஷ்ய அரசுக்கு பயனுள்ள' தகவல்களை சேகரித்ததாகவும், தூதரக அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய கடிதத்தை ரஷ்ய இராணுவ இணைப்பிற்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும், ஆவணங்களின் அங்கீகரிக்கப்படாத நகல்கள், சிம் பேக்கேஜிங் மற்றும் சிசிடிவி காட்சிகள் உட்பட ரகசியமாக வகைப்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
2020-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை இந்தக் குற்றங்களைச் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு குறுகிய விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்ட ஸ்மித் தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஒன்பது குற்றங்களையும் முற்றிலும் மறுத்துள்ளார்.
ஜேர்மனியின் போட்ஸ்டாமில் வசித்து வந்த டேவிட் ஸ்மித், பெர்லினில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றிய நிலையில், 10 ஆகஸ்ட் 2021 அன்று ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று (ஏப்ரல் 6) ஜேர்மனியில் இருந்து மீண்டும் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார்.


