அம்பானியும் பாமரனும் ஒரே மாதிரி வரி கட்டும் போது.. இது மட்டும் ஏன்? சீமான் ஆவேசம்
கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சி பற்றி பேசுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளுக்கு 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர். அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சீமான் பிரச்சாரம்
இந்நிலையில் திருச்சியில் பரப்புரை செய்த சீமான் பேசுகையில், "பல கால ஆண்டு வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் ஒரு வாய்ப்பு. முன்பு, வெள்ளையர்களை எதிர்த்து போராடினோம். இன்று, கொள்ளையர்களை எதிர்த்து போராட அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
கப்பல் துறை, போக்குவரத்து துறை, கல்வி துறை, மருத்துவத்துறை, விமானத்துறை, ரயில்வே துறைகளை தனியாருக்கு மாற்ற அவசியம் என்ன? கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சி பற்றி பேசுவது கொடுமையாகும்.
இந்தியாவில் அம்பானியும், பாமரனும் ஒரே மாதிரியான வரி தான் செலுத்துகிறார்கள். ஆனால், இருவரின் வாழ்க்கைத்தரம் மட்டும் வேறுபட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தான் நம்முடைய வாழ்க்கை தரம் மாறிவிட்டது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |