சமாதி கட்ட, பேனா சின்னம் கட்ட மட்டும் நிதி எப்படி வருகிறது? ஆசிரியர் போராட்டத்தில் சீமான் ஆவேசம்
தமிழகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சீமான் பேசியுள்ளார்.
ஆசிரியர் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை இன்று (அக்.05) காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்பு, சமுதாய நலக்கூடத்தில் ஆசிரியர்களை அடைத்து வைத்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சி சீமான், கைது செய்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக நேரில் சென்று பேசினார்.
சீமான் பேசியது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "நாங்கள் படிக்க வைத்தோம், கல்வி கொடுத்தோம் என பேசி வருகின்றனர். நாங்கள் கல்வி கொடுக்கவில்லை என்றால் சீமான் படித்திருப்பாரா என கேள்வி கேட்கின்றனர்.
என்னை படிக்க வைத்தது காமராஜர். நீங்கள் டாஸ்மாக் வைத்து குடிக்க வைத்தீர்கள். உங்களுக்கு எப்படி ஆசிரியரின் மதிப்பு தெரியும். எதை கேட்டாலும் நிதி இல்லை என்று சொல்கிறீர்கள்.
ஆனால், சமாதி கட்ட, பேனா சின்னம் கட்ட , பன்னோக்கு மருத்துவமனை மற்றும் நூலகம் கட்ட மட்டும் எப்படி நிதி வருகிறது. ஆசிரியர்கள் கேட்கும் அளவில் பாதி அளவையாவது கொடுங்கள்.
ஆசிரியர்களை போல, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அரசு அதனை கண்டுகொள்ளாமல் இருக்குமா. அரை மணி நேரத்தில் சென்று பேசுவார்கள்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |