விபத்தில் தமிழக இளம் வீரர் மரணம்! கண்ணீர் வணக்கம் செலுத்திய சீமான்
மேகாலயாவில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கண்ணீர் வணக்கம் செலுத்தியுள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் (18), பலியான செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த தீனதயாளனுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தியுள்ளார்.
மேகாலயாவில் இன்று தொடங்கும் ஒன்றிய அளவிலான 83வது மேசை பந்தாட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மேகாலயா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் விஷ்வா தீனதயாளன் அவர்கள் அங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
துடிப்புமிகு தனது ஆட்டத்திறனால் தமிழகத்தின் நம்பிக்கையாகத் துளிர்விட்டு, பற்பல சாதனைகள் புரியும் ஆற்றல் பெற்றிருந்த தம்பி விஷ்வா தீனதயாளன் இளவயதிலேயே, இலக்கு நோக்கிய பயணத்திலேயே உயிரிழக்க நேர்ந்தது எதன் பொருட்டும் ஈடுசெய்யவியலாப் பேரிழப்பு!
அன்புமகனைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி விஷ்வா தீனதயாளனுக்கு எனது கண்ணீர் வணக்கம் என சீமான் தெரிவித்துள்ளார்.