விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது: நாம் தமிழர் சீமான்
தங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி இல்லை என்று நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, அதன் தலைவர் விஜய்யுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்பின.
அதற்கு பதில் அளித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'யாருடனும் நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணி கிடையாது' என்றார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும்போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான் மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன்" என தெரிவித்தார்.
கூட்டணியில் இணைவது அவரவர் விருப்பம்
அத்துடன் அவர், "ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு என்பது விஜய்யின் பெருந்தன்மை; அதனை ஏற்று அவருடன் கூட்டணியில் இணைவது அவரவர் விருப்பம். எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது; தனித்துதான் போட்டியிடுவோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |