என் அன்பு சகோதரனை நான் இழந்துவிட்டேன்! மாரிமுத்துவின் மறைவால் கலங்கிய சீமான்
நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு நடிகர்-இயக்குநர், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாரிமுத்துவின் திடீர் மறைவு
தமிழ் திரையுலகினரை நடிகர்-இயக்குநர் மாரிமுத்துவின் மறைவு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் 'எதிர்நீச்சல்' எனும் தொடரில், மாரிமுத்து ஏற்று நடித்த ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் பெரும்பாலான மக்களிடம் அவரை கொண்டு சேர்த்தது.
அவரது திடீர் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீமான் இரங்கல்
இந்த நிலையில் இயக்குநர்-நடிகர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மாரிமுத்துவுடன் அவர் பழகிய நாட்கள் குறித்து அவர் கூறுகையில், 'வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தபோது எனக்கு மாரிமுத்து பழக்கம். அவரது கையெழுத்து ஓவியம் போல் இருக்கும். அனைவரும் ஒரே குடும்பம் போல் பழகி வந்தோம்.
இருவரும் கிராமிய மண்ணை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குமிடையே ஒரு இனம் புரியாத பாசம் இருந்தது. தொடர்ந்து இயக்குநரில் இருந்து நடிப்பதற்கு வந்தார்.
நடிப்பில் தான் அவர் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். ரொம்ப இயல்பாக நடிப்பதன் மூலமே அவர் பிரபலமடைந்தார். ஒரு மிகப்பெரிய உயரத்திற்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென இப்படி ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது.
அதுதான் ரொம்ப வருத்தமாக உள்ளது. அவ்வப்போது வாட்ஸ்அப்பில் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார், நான் வாழ்த்துக்களை கூறுவேன். திடீரென இப்படி ஒரு இறப்பு எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
மேலும் மாரிமுத்து குறித்து பேசிய அவர், 'நல்ல வாசகர் அவர், நன்றாக படிப்பார், விவாத திறமை உள்ளவர். மாரின்னு செல்லமா கூப்பிடுவேன். மாரிமுத்து இப்படி விட்டு விட்டு போவார்னு எதிர்பார்க்கல. ஒரு நல்ல கலைஞரை நாம் இழந்துவிட்டோம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு. என் அன்பு சகோதரனை நான் இழந்துவிட்டேன், ரொம்ப வருந்துறேன்.
அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவிக்கிறேன். என் நண்பன், அன்பு சகோதரன் மாரிமுத்துவுக்கு என் கண்ணீர் வணக்கத்தை செலுத்துறேன்' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |