மாற்று சக்தியாக உருவெடுத்த நாம் தமிழர்! தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல் முறையாக சீமான் வெளியிட்ட அறிக்கை.. என்ன சொல்லியிருக்கிறார்?
மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும் என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் திகதி வெளியான நிலையில் திமுக வெற்றி பெற்றது. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஆனால் பல இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக மூன்றாம் இடத்தை பிடித்து மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் அது தொடர்பில் சீமான் டுவிட்டரில் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 30 இலட்சத்திற்கும் மேலான மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழர் நிலத்தின் தனித்துவமான மாபெரும் அரசியல் அமைப்பாக மாறியிருப்பது வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த செய்தியாகும்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிட்டு 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.1 வாக்கு விழுக்காடு அடைந்தது.
கடந்த 2019 நாடாளுமன்றத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 16,45,185 வாக்குகளைப் பெற்று ஏறத்தாழ 4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
நடந்து முடிந்துள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 30,41,974 வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது மாபெரும் அரசியல் பேரியக்கமாகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.
கடந்த 11 ஆண்டுகளில் தமிழக அரசியல் பரப்பில் நாம் தமிழர் கட்சி ஏற்படுத்தியிருக்கிற அதிர்வுகள் சாதாரணமானவையல்ல. கடந்த 2009 ஆம் ஆண்டுத் தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான ஈழத்தில் நடைபெற்ற இன அழிவினைக் கண்டு கொதித்தெழுந்த தமிழின இளையோர் 2010 மே 18 ல் மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தை ஒரு வெகுசன அரசியல் அமைப்பாக மாற்றினோம்.
தொடர்ச்சியாகப் பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், அரசு அதிகாரத்தின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், பொய்மையும் வன்மம் நிறைந்த அவதூற்றல்களுக்கு இடையிலும் மொழியை, இனத்தினை உயிருக்கு மேலாக நேசிக்கும் இளைஞர்களை உள்ளடக்கியப் பெரும் படையாகக் கட்டி எழுப்பினோம்.
பொய்ப்புளுகுகளால், வசன அடுக்குகளால் புரையோடிப்போன தமிழக அரசியல் பரப்பை, கொள்கை சமரசமின்றி உயிர்ப்போடு போராடிய எங்களது போராட்டங்களால் அதிரவைத்தோம். சாதி-மத உணர்ச்சியைச் சாகடித்து ‘நாம் தமிழர்’ என்ற உணர்வோடு ஊருக்கு ஊர் திரண்ட இளைஞர் கூட்டம் இந்த மண்ணிற்காகத் தூய அரசியலை கட்டியெழுப்பியபோது அதனைத் தகர்க்க, கடும் உழைப்பினால் விளைந்த எங்களது முயற்சிகளை முறியடிக்க எங்களைக் குறித்துத் தொடர்ச்சியான பல பொய்யான பரப்புரைகள் நடைபெற்றன.
ஆனாலும், நாங்கள் மக்களையே நம்பி நின்றோம். உழைப்பினை மிஞ்சியது எதுவும் இல்லை என்று உணர்ந்து உழைத்தோம்.
எங்கெங்கெல்லாம் எம் மண்ணின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் விரைந்து சென்று போராட்டக்களங்களில் முன்நின்றோம். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது போர்க்குரல் எழுப்பி வீதிகளில் நின்று முழங்கித் தீர்த்தோம். வெறும் அரசியல் கட்சியாக மட்டுமில்லாமல், இந்திய அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முதல்முறையாகச் சுற்றுச்சூழல் பாசறை, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை போன்ற பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மாற்று அரசியலுக்கான பல முயற்சிகளை முன்னெடுத்தோம்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்துள்ள வாக்குகள் மூலம் விளையும் உந்துதலைக் கொண்டு, மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும் எனவும், மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும் எனவும் உறுதியளிக்கிறேன்.
புதிதாக அமைய இருக்கிற தமிழக அரசுக்கும், கேரளாவில் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ஐயா பினராயி விஜயன் அவர்களுக்கும், மேற்கு வங்கத்தில் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் அம்மையார் மம்தா பானர்ஜி அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீமானின் முழு அறிக்கை கீழே
மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும்!https://t.co/NhOLkLwHK5 pic.twitter.com/J9IpsnrksQ
— சீமான் (@SeemanOfficial) May 4, 2021