அதிமுகவுக்கு திடீரென ஆதரவு குரல் கொடுத்த சீமான்.., என்ன காரணம்?
கள்ளச்சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி அதிமுக மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுக போராட்டம்
கள்ளச்சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 61 பேர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இந்த போராட்டமானது காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டது. முக்கியமாக போராட்டத்தில் சில கட்டுப்பாடுகளை பொலிஸார் விதித்தனர்.
இந்த போராட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுகவினரின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
சீமான் ஆதரவு
இது தொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.
இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |