அந்த விடயம் வேதனையாக இருந்தது: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஒரு வருட காலம் நீக்கப்பட்டதால் வேதனை அடைந்ததாக முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் விளாசி சாதனை படைத்தவர் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விரேந்தர் சேவாக்.
2008ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சேவாக் 304 பந்துகளில் 319 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் 104 போட்டிகளில் விளையாடி 8,586 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 6 இரட்டை சதங்கள் உட்பட 23 சதம் மற்றும் 32 அரைசதம் அடங்கும்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டு விளையாடாமல் இருந்தது வேதனையாக இருந்ததாக சேவாக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
'2007-2008 ஆண்டு காலகட்டத்தில் திடீரென நான் டெஸ்ட் அணியில் இல்லை என்பதை அறிந்தேன், அது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த ஒரு வருடத்தில் நான் விளையாடியிருந்தால் 10,000 ஓட்டங்களுக்கு மேல் கடந்திருப்பேன். ஆனால், 2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது, நான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் வரை நீங்கள் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டீர்கள் என கும்ப்ளே என்னிடம் கூறினார்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: AFP/File
Photo Credit: Getty