சென்னை மெரினா கடற்கரையில் 50 காசுக்கு டீ விற்றவர்... இன்று பல லட்சம் வருவாய் ஈட்டும் உணவகங்களுக்கு உரிமையாளர்
தோல்வியில் முடிந்த காதல் திருமணம், கணவரிடமிருந்து பிரிவு உட்பட தாம் எதிர்கொண்ட கஷ்டங்களை மொத்தமாக வென்று தற்போது பல மில்லியன் டொலர் வணிக சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார் பாட்ரிசியா நாராயண்.
மெரினா கடற்கரையில் 50 காசுக்கு டீ
பாட்ரிசியா நாராயண் கடும் உழைப்பால் உருவான தொழிலதிபர். மட்டுமின்றி சென்னையில் நன்கு அறியப்படும் உணவகங்களின் உரிமையாளர். பல துன்பங்களை எதிர்கொண்டு தான் தற்போதைய நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார்.
2010ல் FICCI பெண் தொழிலதிபர்களுக்கான விருது வாங்கியுள்ள பாட்ரிசியா சந்தீபா உணவங்களின் இயக்குனராக உள்ளார். பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் 50 காசுக்கு டீ விற்றவர் இன்று நாளுக்கு பல லட்சங்கள் வருவாய் ஈட்டும் உணவகங்களுக்கு உரிமையாளராக உயர்ந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதியில் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பாட்ரிசியா, 17 வயதில் தமது குடும்பத்தை எதிர்த்து, இந்து பிராமண நபரான நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சில மாதங்களிலேயே, தமது கணவர் போதை மருந்துக்கு அடிமையானவர் என்பதை அறிந்துள்ளார். குடும்பத்தையும் பிள்ளைகளையும் கண்டுகொள்ளாத கணவரிடம் இருந்து இரண்டு பிள்ளைகளுடன் பிரிந்து செல்ல முடிவு செய்தார்.
எங்கு செல்வது என தவித்திருந்த பாட்ரிசியாவை அவரது தந்தை மன்னித்து ஏற்றுக்கொண்டார். ஆனால் தனித்து இயங்குவதே முறை என முடிவெடுத்த பாட்ரிசியா, தமக்கு மிகவும் பிடித்தமான சமையல் கலையை வாழ்வாதரத்திற்கு பயன்படுத்த முடிவு செய்தார்.
தாயாரிடம் இருந்து கடனாக பெற்ற தொகையில் வீட்டில் இருந்தே ஊறுகாய், ஜாம் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தார். தயாரித்த அனைத்தும் ஒரே நாளில் விற்றுவிட, எண்ணிக்கையை அதிகரித்தார்.
அந்த வாய்ப்பு பாட்ரிசியாவுக்கு திருப்புமுனை
தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்தார். மாற்றுத்திறனாளிகள் இருவரின் உதவியுடன் தனது முதல் டீ கடையை பாட்ரிசியா முன்னெடுத்து நடத்தினார்.
முதல் நாள் ஏமாற்றமே மிஞ்சினாலும், இரண்டாவது நாள் ரூ 700 சம்பாதித்துள்ளார். 1982 முதல் 2003 வரையில் மெரினா கடற்கரையில் பாட்ரிசியா கடை நடத்தி வந்துள்ளார்.
ஒருமுறை குடிசை மாற்று வாரியத்தின் தலைவர் இவரது உணவு பண்டங்களின் தரத்தால் ஈர்க்கப்பட்டு தமது அலுவகத்தில் உள்ள உணவகத்தை நடத்தும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
அந்த வாய்ப்பு பாட்ரிசியாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. சென்னையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பாட்ரிசியா புது கிளையை துவங்கினார். மேலும், 1998ல் சங்கீதா உணவகங்களின் பங்குதாரராகவும் மாறினார்.
2006ல் பாட்ரிசியா மற்றும் அவரது மகன் இணைந்து சந்தீபா என்ற தங்களின் முதல் ஹொட்டலை திறந்தனர். மெரினா கடற்கரையில் 50 காசுக்கு டீ விற்றவர் இன்று நாளுக்கு ரூ 2 லட்சத்திற்கும் அதிக வருவாய் ஈட்டும் ஹொட்டல்களை நடத்தி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |