பிரெக்சிட்டால் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பார்சல் சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: கிறிஸ்துமஸ் நேரத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பார்சல் சேவை விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சுங்க வரி மற்றும் மதிப்புக் கூடு வரி காரணமாக பார்சல்களை அனுப்புவதற்கான கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதோடு, சில பொருட்களை அனுப்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதால், கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் உறவினர்களுக்கு பரிசுப்பொருட்கள் முதலானவற்றை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு அனுப்பப்படும் பார்சல்கள்
இனி பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு அனுப்பப்படும் பார்சலில் என்ன பொருள் இருக்கிறது என்பதையும் customs declaration form ஒன்றில் தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட அயர்லாந்துக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
உணவுப்பொருட்கள்
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் தயாரிப்புகள் எதையும் எளிதில் அனுப்பமுடியாது. எனவே, சாக்லேட்டுகளைக் கூட பரிசாக பார்சலில் அனுப்ப முடியாது (சாக்லேட்டில் பால் உள்ளது என்பதால் இந்த கட்டுப்பாடு).
தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் பார்சலில் அனுப்பப்பட்டால், அவை கைப்பற்றப்பட்டு எல்லையிலேயே அழிக்கப்படும்.
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு அனுப்பப்படும் பார்சல்கள்
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய புதிய விதிகள் காரணமாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு பார்சல்கள் அனுப்புவதிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
உணவுப் பொருட்கள்
பிரான்ஸ் விதிகளைவிட பிரித்தானிய விதிகள் சற்று குறைவான கட்டுப்பாடுடையவையாக இருப்பதால், உணவுப்பொருட்களை பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு அனுப்புவது சற்று எளிது.
பிரித்தானிய அரசின் இணையதளத்தில், பால் அல்லது இறைச்சி சம்பந்தப்பட்ட உணவுகளை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வழக்கமான சுங்க விதிகள் இன்னமும் பயன்பாட்டில்தான் உள்ளன.
ஆகவே முறைப்படி பார்சல் செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்கள் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆனால், எதிர்காலத்தில், foie gras என்னும் பிரெஞ்சு தயாரிப்பான வாத்து ஈரல் உணவை மட்டும் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது. ஆகவே, அந்த உணவை மட்டும் பிரான்ஸ் நாட்டவர்கள் பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால், இப்போதைக்கு அந்த உணவை பார்சலில் அனுப்புவதில் எந்த பிரச்சினையும் இல்லை.