இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 101 வயதான நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளிடம் தொலைபேசி வாயிலாக அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் 1.55 மணிக்கு நல்லகண்ணு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நல்லகண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி அவரது உடல் வழியனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
“எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் - தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு… pic.twitter.com/tLQhQFQ0SA
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 25, 2026
உயிரிழந்த நல்லகண்ணுவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நல்லகண்ணுவின் உடல் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 3 மணி வரை வைக்கப்படுகிறது.
நாளை மாலை 3 மணி முதல் கட்சி தொண்டர்கள் அணிவகுப்புடன் கட்சி அலுவலகத்தில் இருந்து ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு உடல் தானம் கொடுக்க கொண்டு செல்லப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |