3000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்... ரூ 13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலகளாவிய சந்தை நிலவரங்கள் கலவையாக இருந்த நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டு முக்கிய குறியீடுகளும் சரிவைப் பதிவு செய்துள்ளது.
நான்கு வர்த்தக நாட்களில்
தொடர்ச்சியான இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தங்களுடைய முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 74,943 என்ற உச்சபட்ச குறைந்த அளவைத் தொட்டது.
இதன் மூலம் சுமார் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. அதேபோல், நிஃப்டி 50 குறியீடு 1.3 சதவீதம் சரிந்து 23,508 என்ற நாளின் குறைந்த அளவை எட்டியது.
கடந்த நான்கு வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் மொத்தம் 3,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது சுமார் 4 சதவீதம் சரிந்தது. நிஃப்டி 50 குறியீடும் 3 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
இந்த தொடர்ச்சியான வீழ்ச்சி முதலீட்டாளர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. மே 6-ம் திகதிக்கு பின்பு இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நான்கு நாட்களில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.473 லட்சம் கோடியில் இருந்து ரூ.460 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்த வீழ்ச்சிக்கு பின்னால் பல்வேறு உலகளாவிய மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இந்தியப் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள ஆறு முக்கியக் காரணங்களை சந்தை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கனத்திற்கான அழைப்பு சந்தையின் வீழ்ச்சிக்கு முதன்மையான ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்த சிக்கன அறிவிப்புகள் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த கவலையை சந்தையில் உருவாக்கியதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் எதிரொலியாக பல முக்கியமான பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது, குறிப்பாக ப்ளூ சிப் பங்குகளை கடுமையாக பாதித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இரண்டாவதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராததால் உலக சந்தைகள் பதற்றத்தில் உள்ளன. மட்டுமின்றி, ஈரானுடனான போர் நிறுத்தம் எப்போதுவேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என்ற ட்ரம்பின் எச்சரிக்கையும், ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ளதும் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பீப்பாய்க்கு 100 டொலருக்கு மேல் உள்ளது. அடுத்ததாக, இந்திய ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை ரூபாய் 35 பைசா சரிந்து, டொலருக்கு எதிராக வரலாறு காணாத 95.63 என்ற அளவுக்கு வீழ்ந்தது. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர். மே மாதத்தில் மட்டும் ரூ.19,500 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுவும் சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இன்னொன்று, அமெரிக்க டொலர் வலுப்பெறுவதும், அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திர முதலீட்டின் லாபம் உயர்வும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்க 10 ஆண்டு பத்திர முதலீட்டின் லாபம் 4.42% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |