ரூ 1 லட்சம் முதலீடு... ஐந்தே நிமிடத்தில் ரூ 44 லட்சம் லாபம்: வாயை பிளக்கும் முதலீட்டாளர்கள்
Trader's Claim On Sensex's Wild Swing: சென்செக்ஸின் கடும் ஏற்ற இறக்கம் குறித்த வர்த்தகர் ஒருவரின் கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் நேற்று வியாழக்கிழமை வர்த்தக முடிவுக்கு முன்பு சென்செக்ஸில் ஏற்பட்ட திடீர் மற்றும் மிக பெரிய ஏற்ற, இறக்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், சென்செக்ஸ் 'புட் ஆப்ஷனில்' (put option) செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் முதலீடு, வெறும் ஐந்து நிமிடங்களில் 44 லட்சம் ரூபாயாக மாறியிருக்கக்கூடும் என்று ஒரு வர்த்தகர் பதிவிட்டுள்ளார்.
அந்த வர்த்தகரின் கூற்றுப்படி, ஒரு முதலீட்டாளர் பிற்பகல் 3:15 மணிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான 'சென்செக்ஸ் 76,500 புட் ஆப்ஷன்களை' (Sensex 76,500 put options) வாங்கி, அவற்றை 3:20 மணிக்கு விற்றிருந்தால், அந்த வர்த்தகத்தின் மூலம் சுமார் ரூ. 44 லட்சம் லாபம் கிடைத்திருக்கக்கூடும்.
மாதாந்திர டெரிவேடிவ்ஸ் (derivatives) ஒப்பந்தங்கள் முடிவடையும் நாளில், வர்த்தக நிறைவு ஏல அமர்வின் (CAS) போது சென்செக்ஸ் குறியீட்டில் அசாதாரணமான ஏற்ற இறக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளியானது.
தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமர்வின் பிற்பகுதியில் சென்செக்ஸில் ஒரு கூரான ஏற்ற இறக்கம் காணப்பட்டது. மாலை 3.17 மணியளவில் சுமார் 77,200 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ், 3.23 மணிக்குள் 74,983 புள்ளிகளுக்கு சரிந்தது.
அதாவது, சில நிமிடங்களிலேயே 2,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியது. 3.23 மணி முதல் 3.30 மணி வரை அடுத்த 7 நிமிடங்களில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 2,000 புள்ளிகள் மீண்டும் ஏறியது.
இறுதியில், சென்செக்ஸ் 76,934 புள்ளிகளில் முடிவடைந்தது. இது முந்தைய நாள் முடிவை விட 539 புள்ளிகள் குறைவு என்றாலும் கூட 2000 புள்ளிகள் மீண்டு வந்தது பாசிட்டிவாகவே பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் மாற்றங்கள் குறியீட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சில நிமிடங்களில் கடுமையாக சரிந்தது. ரிலையன்ஸ் பங்கு சுமார் ரூ.1,289ல் இருந்து வெறும் 7 நிமிடங்களில் ரூ.1,250 ஆக சரிந்தது.
இருப்பினும், பின்னர் மீண்டும் வேகமாக உயர்ந்து ரூ.1,286ல் முடிந்தது. ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகளிலும் வர்த்தகத்தின் இறுதி சமயத்தில் பெரியளவில் இறங்கி, பிறகு மீண்டும் ஏறியது.
இது முதலீட்டாளர்களிடையே மிக பெரிய கலக்கத்தை கொடுத்தது. இது புதிய குளோசிங் ஆக்ஷன் செஷன் (Closing Auction Session) முறை குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
சந்தை முடிவில் பங்குகளின் இறுதி விலையை நிர்ணயிக்கும் இந்த புதிய முறையை மும்பை பங்குச்சந்தை ஆகஸ்ட் 3ம் திகதி அறிமுகப்படுத்தியது. ஒரு பங்கின் விலையை செயற்கையாக கட்டுப்படுத்துவதை தடுக்கவே இந்த புதிய முறையை மும்பை பங்குச்சந்தை கொண்டு வந்தது.

ஈக்விட்டி டெரிவேட்டிவ்கள் வர்த்தகம் செய்யப்படும் சுமார் 200 பங்குகளுக்கு இந்த முறை தற்போது பொருந்துகிறது. மற்ற பங்குகளுக்கு பழைய முறை தொடர்கிறது. இந்த புதிய முறை அறிமுகமானதிலிருந்து, மாலை 3.15 மணி முதல் 3.30 மணி வரை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் வழக்கத்திற்கு மாறான விலை ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து ஏற்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க சென்செக்ஸ் மற்றும் அதன் சில பங்குகளில் முறைகேடு செய்ததாக கூறி கடந்த வாரம் இரு முதலீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது.
சம்பந்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து அந்த இரண்டு நிறுவனங்களையும் சந்தையிலிருந்து விலக்கி வைத்துள்ள ஒழுங்குமுறை ஆணையம், சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் சுமார் ரூ. 3.8 கோடியை திரும்பச் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |