கனடாவில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு போதைப்பொருள் கலந்து கொடுத்த இராணுவ வீராங்கனை
கனடாவில், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களுக்கு கஞ்சா கலந்த கேக் தயாரித்து வழங்கியதாக இராணுவ வீராங்கனை ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
New Brunswickஐச் சேர்ந்த இராணுவ வீராங்கனையான Chelsea Cogswell, இராணுவ கேன்டீனுக்கு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். ஒருநாள், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு கேக் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் Chelsea.
கேக்கை சாப்பிட்ட வீரர்கள் தலைசுற்றல், மயக்கம், கவலை முதல் பல்வேறு மனப் போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
வீரர்களுடைய சிறுநீரை பரிசோதித்ததில், அவர்களுக்கு கஞ்சா கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் சாப்பிட்ட கப் கேக்கின் உறையில் கஞ்சா இருப்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மருத்துவர் பரிந்துரைப்படி மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா வாங்க Chelseaவுக்கு அனுமதியும் இருந்ததால், வீரர்களுக்கு கஞ்சா கலந்த கேக்கை தயாரித்துக் கொடுத்ததாக Chelsea மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனரக ஆயுதங்களைக் கொண்டு வீரர்கள் பயிற்சி செய்துகொண்டிருந்த நிலையில், அவர்கள் கஞ்சா அருந்தியதால், ட்ரக்குகளை செலுத்திக்கொண்டும், பெரிய துப்பாக்கிகளைக் கையாண்டு கொண்டும் இருந்ததால், மற்றவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் ஒரு அபாயமும் இருந்ததாக இராணுவ நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட வீரர்கள் கொடுத்த அறிக்கைகள் நேற்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன.
Lyann Lechman என்ற இராணுவ வீராங்கனை, அந்த சம்பவம் மீளமுடியாத ஒரு தாக்கத்தைத் தன் மீது ஏற்படுத்திவிட்டதாகவும், மற்றவர்களை நம்புவதை தான் நிறுத்த அது காரணமாக அமைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Liam Jarbeau என்ற வீரர், தன்னால் இனி மக்களை நம்பமுடியுமா என தனக்குள் கேள்விகள் எழுந்துள்ளதாகவும், தன்னைவிட உயர் பதவியிலிருந்த ஒருவர் தனக்கும் தன் சக வீரர்களுக்கும் துரோகம் செய்துவிட்டதாகவும், தங்களை பெரும் அவதிக்குள்ளாக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில வீரர்கள் ஏற்கனவே போதைப்பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தங்களை கடுமையாக பாதித்ததாக தெரிவித்துள்ளார்கள்.
William Long என்பவர், மற்றவர்கள் அந்த சம்பவத்தை வேடிக்கையானது என நினைப்பதாகவும், தன்னை கேலி செய்வதாகவும், ஆனால், தன்னால் அது வேடிக்கையான சம்பவம் என எண்ணமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்கள் போர்க்காலங்களில் ஒரு குழுவாக இணைந்து செயலாற்றவேண்டிய நிலையில், இந்த சம்பவம் சக வீரர்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டதாகவும், குழுவாக இணைந்து செயலாற்றும் விடயத்தை பாதித்துள்ளதாகவும் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றுடன் சாட்சியங்கள் முடிவுக்கு வரும் நிலையில், சட்டத்தரணிகள் தங்கள் முடிவான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க இருக்கிறார்கள்.