மருத்துவமனையில் சிசிடிவி! நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் அதாவது 23ம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார் செந்தில் பாலாஜி.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்த போது, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், விசாரணையை மருத்துவமனையிலேயே நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணையின் போது மருத்துவ சிகிச்சைகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், செந்தில் பாலாஜியை துன்புறுத்தாமல் விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதுதொடர்பான ஆவணத்தில் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்குவதற்காக நீதிமன்ற ஊழியர்கள் நேற்று மருத்துவமனைக்கு சென்றனர்.
ஆனால் செந்தில் பாலாஜி ஓய்வில் இருந்ததால் கையெழுத்து வாங்க முடியாமல் போயுள்ளது, மறுபடியும் மாலை நேரம் சென்று ஆவணத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
விசாரணை தொடங்கும் பட்சத்தில், செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிறைத்துறை பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு, மத்திய காவல் படையின் பாதுகாப்பு அளிக்கப்படும்.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கமெரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.