ஓராண்டை நிறைவு செய்த செந்தில் பாலாஜியின் சிறை பயணம்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளார்.
சிறையில் செந்தில் பாலாஜி
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த 2016 -ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் செயல்பட்ட செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து, 2021 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சரானார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி ஜூன் 18 -ம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இதில், அவருக்கு 38 முறை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 10-ம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |