செந்தில் பாலாஜி வழக்கறிஞர் சொன்ன அந்த பாயிண்ட்- ஆமோதித்த நீதிபதிகள்- நடந்தது என்ன?
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, அதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, 21ம் தேதி அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் இருந்து வழக்கறிஞரும் திமுக எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா காணொலி வாயிலாக வாதங்களை முன்வைத்தார்.
செந்தில் பாலாஜி பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆதாரத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார் எனவும், கைது செய்யப்பட்ட பின்னர் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் என்பதால் கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை.
ஒரு நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் தலையிட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை.
ஆட்கொணர்வு மனுவில் நீதிமன்ற காவலை எதிர்க்காதது ஏன் என்று தெரியவில்லை, கைது செய்யப்பட்ட 10 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்திடமும் தெரிவிக்கப்பட்டது, அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளது என்பதை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம், இதனால் இந்த மனு செல்லாது என துஷார் மேத்தா வாதிட்டார்.
இதற்கு எதிர்வாதம் வைத்த என்.ஆர்.இளங்கோ, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாதே, சட்டத்தில் அதற்கு இடமில்லை.
இதனை உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது, பின்னர் எப்படி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுக்க முடியும்.
கைதில் சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை, எனவே இது சட்டவிரோத கைது தான் என்றார்.
மேலும் 41 ஏ படி கைது செய்தால் குறித்த நபரிடமும், அவர்கள் குடும்பத்தினருடமும் காரணத்தை தெரிவிக்க வே்ணடும், இவர்களுக்கு கைது செய்யவே உரிமை இல்லாத போது, காரணத்தையும் தெரிவிக்காமல் கைது செய்தது சட்டவிரோதம் தான் என்றார்.
இதை கேட்ட நீதிபதி "ஆம், சரிதான்" என்றார். இதையடுத்து நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் அமைதி நிலவியதுடன் நீதிபதிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
தொடர்ந்து விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |