செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு தள்ளிவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு ஜூன் 22-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
22-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சா் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 22-ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த பின்னர், வரும் 28-ஆம் திகதி வரை செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணா்வு மனு தாக்கல்
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாக, அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த ஆட்கொணா்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று முறையீடு செய்தார்.
ஆனால் நீதிபதி ஆர்.சக்திவேல் இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்று கூறியதால், நேற்று மாலை இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா முன்னிலையில் முறையிடப்பட்டது.
இதையடுத்து, நேற்று மாலை வேறு ஒரு அமர்வில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவில்லை.
தீர்ப்பு-காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி
இந்நிலையில், இன்று நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 22-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும், இந்த ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.