பாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய தமிழர்! டெஸ்டில் 89 ஓட்டங்கள் விளாசல்..தென் ஆப்பிரிக்கா 404
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் செனுரன் முத்துசாமி 89 ஓட்டங்கள் விளாச தென் ஆப்பிரிக்கா 404 ஓட்டங்கள் குவித்தது.
ஷான் மசூட் 87 ஓட்டங்கள்
ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 333 ஓட்டங்கள் குவித்தது. ஷான் மசூட் (Shan Masood) 87 ஓட்டங்களும், சவுட் ஷகீல் 66 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) 76 ஓட்டங்களும், டோனி டி ஸோர்சி 55 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆசிப் அலியின் அபார பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து, 235 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகள் என தடுமாறியது.
அப்போது தமிழரான செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) நங்கூரமாக நின்று ஆடி பாகிஸ்தானுக்கு தலைவலி கொடுத்தார்.
அதே சமயம், அவருடன் கூட்டணி அமைத்த ககிஸோ ரபாடா (Kagiso Rabada) அதிரடியில் மிரட்ட தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
செனுரன் முத்துசாமி அபாரம்
செனுரன், ரபாடா இருவரும் அரைசதம் விளாச தென் ஆப்பிரிக்கா 400 ஓட்டங்களை கடந்தது. ரபாடா 61 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இறுதிவரை களத்தில் நின்ற செனுரன் முத்துசாமி 8 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா 404 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தானின் ஆசிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தற்போது 71 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |