பிரான்சில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து தப்பிய ஏழு பெண்கள்... சவுதி இளவரசர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு வெளியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து தப்பிய ஏழு பெண்கள், சவுதி இளவரசர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
சவுதியில் அந்த இளவரசர் வீட்டில் வேலை செய்வதற்காக பணியமர்த்தப்பட்ட அந்த பெண்கள், இளவரசர் குடும்பம் கோடை விடுமுறைக்காக பிரான்சுக்கு வரும்போதெல்லாம் கூடவே அழைத்துவரப்படுவார்களாம். அப்படி வந்தபோதுதான் இந்த ஏழு பெண்களும் தப்பியிருக்கிறார்கள்.
அடிமைகளாக வைக்கப்பட்டவர்களை மீட்கும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள், பல ஆண்டுகளாக இளவரசர் வீட்டில் வேலை செய்த அந்த பெண்களை சந்திக்கும்போது, அவர்கள் பசி, பசி என அழுததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆம், அந்த இளவரசர் வீட்டில், அந்த ஏழு பெண்களையும் அடிமைகள் போலவே நடத்தியிருக்கிறார்கள்.
வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் வேலை, உணவு என்று எதுவும் கிடையாது, கிடைக்கும் மிச்சம் மீதியைத்தான் சாப்பிடவேண்டும், அதை சாப்பிடும்போதும் இளவரசரின் பிள்ளைகள் அழைத்தால் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓடவேண்டும், வெறும் தரையில்தான் படுக்கவேண்டும் என 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் அந்த பெண்கள்.
38 முதல் 51 வயது வரையுள்ள, பெரும்பாலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த பெண்கள் ஓய்வில்லாமல் உழைத்தும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மாதம் ஒன்றிற்கு வெறும் 300 யூரோக்கள்தானாம்.
பிரான்ஸ் அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். ஆனால், அந்த இளவரசர் இப்போது பிரான்சில் இல்லாததால், அவரை நேரடியாக விசாரிக்க இயலவில்லை.
சம்பந்தப்பட்ட இளவரசரின் பெயர் வெளியிடப்படவில்லை. அத்துடன், அவருக்கு தூதரக பாதுகாப்பு இருக்குமானால் அவரைக் கைது செய்யவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.