கனடாவில் பணி தேடுவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
கனடாவின் அனைத்துத் துறைகளிலும் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கிறார், Scotiabank நிறுவனத்தின் மூத்த பொருளியல் வல்லுநரான Marc Desormeaux.
தொழிலாளர் தட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதாரம் கோவிட் காலகட்டத்திலிருந்து மீள்வதற்கும் பெரும் தடையாக உள்ளது என்கிறார் அவர்.
2021ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டின்போது கனடாவில் 913,000 பணியிடங்கள் காலியாக இருந்தன என்கிறார் Desormeaux. ஒரு காலாண்டில் இது மிக அதிக அளவிலான எண்ணிக்கையாகும் என்கிறார் அவர்.
இந்தத் தொழிலாளர் தட்டுப்பாட்டிலிருந்து எந்த துறையும் தப்பவில்லை என்பது உண்மைதான் என்றாலும், சில துறைகளில் மிகக் கடுமையான பணியாளர் தட்டுப்பாடு ஏற்பட்டது என்கிறார் Desormeaux.
தங்குமிடம், உணவு சேவை மற்றும் நேரலை கலை நிகழ்ச்சிகள் நடத்தும் துறைகள் மற்றும் எந்த துறைகள் எல்லாம் அதிக அளவில் கூடும் மக்களை நம்பி இயங்குகின்றனவோ, அந்தத் துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று கூறும் Desormeaux, இதே நிலைமை, நிதி சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானத்துறை முதலான பல்வேறு துறைகளிலும் பெருமளவில் காணப்பட்டது என்கிறார்.
இதுபோக, பெருந்தொற்று காலகட்டத்துக்கு முன்னரே, தொழில்நுட்பத்துறை முதலான துறைகளில் திறன்மிகு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவியதாகவும், உள்கட்டமைப்புத்துறை புதுப்பித்தலில் பெருமளவில் செய்யப்படும் பெரிய அளவிலான முதலீடுகளால் மேலும் திறன்மிகு பணியாளர்களின் தேவை அதிகரித்ததாகவும் தெரிவிக்கும் அவர், புலம்பெயர்வோரின் முக்கியப் பங்கு மூலம்தான் கனடாவில் ஏற்பட்டுள்ள இந்த சவால்களை சந்திக்க முடியும் என்கிறார்.
ஆக, அடுத்த சில ஆண்டுகளுக்கு கனடாவில்நிறைய புலம்பெயர்வோருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என்று கூறும் Desormeaux, புதிதாக கனடாவுக்கு புலம்பெயரும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறார்.
கனடாவுக்கு புதிதாக வருவோர், உங்களுக்கு எத்தகைய வாழ்க்கைத்தரம் வேண்டும், நீங்கள் எங்கு குடியமர விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்வதைப் பொருத்து உங்கள் கனேடிய அனுபவம் அமையும், எங்களைப் பொருத்தவரை, கனடாவின் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம் என்கிறார்.