இளம்பெண் அகதிகளை தவறான தொழிலில் ஈடுபடுத்தும் அபாயம்: பிரித்தானியாவின் திட்டம் தொடர்பில் எச்சரிக்கை
உக்ரைனிலிருந்து போருக்குத் தப்பி வரும் இளம் பெண் அகதிகளை தவறான விடயங்களுக்காக பயன்படுத்தும் ஒரு அபாயம், பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள திட்டத்தில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதாவது, உக்ரைனிலிருந்து வரும் அகதிகளுக்கு, பிரித்தானியர்கள் தங்கள் வீட்டில் இடமளிக்கும் வகையில் பிரித்தானியா ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆனால், இளம் உக்ரைன் பெண் அகதிகளுக்குத் தங்கள் வீடுகளில் இடமளிக்க, தனிமையாக இருக்கும், திருமணம் ஆகாத மற்றும் நடுத்தர வயது ஆண்கள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்கள்.
பலர் உக்ரைனிலிருந்து வரும் அகதிகளை வரவேற்க நல்ல மனதுடன் அந்த திட்டத்தில் பங்கேற்றாலும், சிலர் அதைத் தவறாக பயன்படுத்திக்கொள்ள முயல்வது தெரியவந்துள்ளது.
உதாரணமாக, தன்னை ஒரு மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு பிரித்தானியர், தனக்கு ஒரு பெரிய வீடு இருப்பதாகவும், இளம்பெண் அகதிகளுக்கு தங்க இடமும், மாதம்தோறும் உதவித்தொகையும் கொடுக்க தான் முன்வந்துள்ளதாகவும், பதிலுக்கு அந்த இளம்பெண் அகதிகள் அவருடன் ’அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளவேண்டும், அதாவது, பாலுறவு கொள்ளவேண்டும் என்றும் மறைமுகமாக கேட்டுள்ளார்.
மேலும், பல ஆண்கள், அழகான இளம்பெண் அகதிகளை ஒன்லைனில் தொந்தரவு செய்யத் தொடங்கிவிட்டிருக்கின்றனர்.
Olena (25) என்னும் உக்ரைனிய இளம்பெண் அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். அவருக்கு தங்கள் வீட்டில் இடமளிக்க விரும்புவதாக பலர் தெரிவிக்க, அவரோ, தனக்கு இடம் கிடைத்துவிட்டதாகத் தெரிவித்தும், அவர் யார் வீட்டில் தங்கியிருக்கிறார் என்பதை தெரிவிக்குமாறு பலர் இன்னமும் அவரை வற்புறுத்திவருகிறார்களாம்.
ஆக, பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம், ஜோடி தேடும் ஆண்களுக்கு உதவும் ஒரு தளமாகிவிடும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார்கள் தொண்டு நிறுவனத்தினர்.
மேலும், பாலியல் கடத்தல்காரர்களிடம் அந்த அப்பாவிப் பெண்கள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது எனவும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ஆனால், அந்த அகதிகள் யார் வீட்டில் தங்கப்போகிறார்கள் என்பதை நேராக சென்று பார்த்து, அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள், அகதிகளுக்கு அங்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை உறுதி செய்த பிறகே உக்ரைனியர்களுக்கு விசா கொடுக்க இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.