74 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்து கொலை செய்த நபர்
கேரளாவில், 74 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்து கொலை செய்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி
கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதியில் 74 வயது மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வருகிறார். நேற்று இவரது வீடு வெகுநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.
இதனால், சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் கதவைத் தட்டிப் பார்த்தனர். ஆனால், கதவு திறக்கவில்லை.
உடனே, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டி ரத்த வெள்ளத்தில் தரையில் மயங்கிக் கிடந்தார்.
உடனே, மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
மருத்துவமனையில் மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
கொலை செய்த நபர் கைது
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன் பின்பு, வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
உடனே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மூதாட்டி பக்கத்து வீட்டில் வசித்த ராஜன் என்பவர், கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.