நீர்மூழ்கிக் கப்பல்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்! பிரித்தானிய கடற்படை விசாரணை
நீர்மூழ்கிக் கப்பல்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து பிரித்தானிய கடற்படை விசாரணையைத் தொடங்கியது.
ஆண் குழு உறுப்பினர்களும் சக பெண் ஊழியர்களை துன்புறுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்களில் பெண் ஊழியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக பிரபல பிரித்தானிய ஊடகமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டதை அடுத்து, பிரித்தானிய ராயல் கடற்படைத் தளபதி Admiral Ben Key விசாரணையை அறிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படை லெப்டினன்ட் Sophie Brook-ன் நேர்காணலின் அடிப்படையில் சனிக்கிழமையன்று டெய்லி மெயில் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டது.
அவர் கடற்படையில், குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்களில் தொடர்ந்து நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விவரித்தார். இதில் சக ஆண் குழு உறுப்பினர்களும் பெண் ஊழியர்களின் பெயர்களை "கற்பழிப்பு பட்டியலில்" சேர்த்துள்ளனர் என்று அவர் கூறினார்.
ப்ரூக்ஸின் குற்றச்சாட்டுகளை பெயரிடப்படாத வேறு இரண்டு அதிகாரிகள் ஆதரிப்பதாக கட்டுரை மேற்கோள் காட்டுகிறது.
இதையடுத்து, பென் கீ செய்தித்தாளுக்கு அளித்த அறிக்கையில், தனது மூத்த குழுவால் இத்தகைய குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும், அருவருப்பான குற்றச்சாட்டுகளால் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறினார்.
மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ராயல் நேவியில் இடமில்லை, பொறுத்துக் கொள்ளப்படாது என்று அவர் கூறினார். மேலும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட எவரும் பதவியைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இப்போது 30 வயதாகும் ப்ரூக்ஸ், நீர்மூழ்கிக் கப்பல் தளபதியாக வரவிருந்தார். ஆனால் கப்பலில் உள்ள கலாச்சாரம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார், அதையடுத்து கடற்படையால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக என கூறினார்.
அவரது ஆண் மேலதிகாரிகளால் எப்போதும் ஆபாசமாக அழைக்கப்படுவதாக கூறினார்.
முதலில் கற்பழிக்கப்படும் பெண் குழு உறுப்பினர்கள் பட்டியலில் தான் ஆறாவது இடத்தில் இருப்பதாக அறிந்துக்கொண்டதாக கூறினார்.
ஒரு திருமணமான சக ஊழியர் தன்னிடம் ஆடைகள் இல்லாமல் உடலை வெளிப்படுத்தியதாகவும், மற்றொரு சக குழு உறுப்பினர் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது படுக்கையில் ஏறி தன்னை முத்தமிடத் தொடங்கினார் என்று குற்றம் சாட்டினார்.
ராயல் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் சேவை 2011-ல் மட்டுமே பெண்களை அனுமதிக்கத் தொடங்கியது.