எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செலுத்திய பார்வையாளர்கள்... குலுங்கிய விம்பிள்டன் மைதானம்: புல்லரிக்கவைத்த ஒரு காட்சி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் துவங்கும் முதல் நாளே மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சம்பவங்களால் களைகட்டியது.
லண்டனிலுள்ள விம்பிள்டனில் நடைபெறும் முதல் போட்டியைக் காண்பதற்காக, கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பங்காற்றியவர்களுக்கும் இலவசமாக நூற்றுக்கணக்கான டிக்கெட்களை வழங்கி, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களை கௌரவித்திருந்தார்கள்.
போட்டிக்கு முன், கொரோனா காலகட்டத்தில் உயிரையும் பொருட்டாக எண்ணாமல் களமிறங்கிப் பணியாற்றிய மருத்துவப் பணியார்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்கள் அறிவிப்பாளர்கள்.
An opening day on Centre Court with a difference...
— Wimbledon (@Wimbledon) June 28, 2021
A special moment as we say thank you to those who have played such an important role in the response to COVID-19#Wimbledon pic.twitter.com/16dW1kQ2nr
குறிப்பாக, கொரோனா தடுப்பூசி தயாரிக்க காரணமானவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம், அவர்களால்தான், இன்று நம்மால் இங்கு இந்த விளையாட்டுப்போட்டியைக் காண கூட முடிந்திருக்கிறது என்று அறிவிப்பாளர் கூற, கமெராக்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணை நோக்கித் திரும்பின.
எளிமையாக அமர்ந்திருந்த அந்த பெண் ஒரு சாதாரண பெண்ணல்ல! அவர், ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை வடிவமைத்தவர்களில் ஒருவரான Dame Sarah Gilbert... அவரைக் காட்டியதும் மக்களுடைய கரவொலியால் அரங்கம் குலுங்க, ஒருவர் எழுந்தார்... அவ்வளவுதான் மொத்த அரங்கமும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி Sarah Gilbertஐ கௌரவிக்க, நெகிழ்ந்து போனார் அவர்.
சாதாரணமாகவே, மிக எளிமையானவராம் அவர். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த Sarah Gilbert, கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பங்கேற்றதால் The Times' பத்திரிகையின் 'Science Power List' என்ற பட்டியலில் இடம்பிடிக்க, அவரை சந்தித்து பேட்டி எடுக்கும்போது, ’பிள்ளைகளை சமாளித்து பழகிவிட்டேன், ஆகவே, வேலை கடினமானதாக இல்லை’ என எளிமையாக பதிலளித்து அடக்கம் காட்டியவராம்.
அடுத்தபடியாக, அரசு மருத்துவமனை ஊழியர்களுக்காக நிதி திரட்டுவதற்காக தள்ளாத வயதில் நடைபயிற்சி மேற்கொண்டு, 32 மில்லியன் பவுண்டுகள் சேகரித்த Captain Sir Tom Mooreக்கு கௌரவம் செலுத்தப்பட்டது.
அவர் காலமாகிவிட்டதால், அவர் சார்பில் வந்திருந்த அவரது மகளான Hannah Ingram-Mooreக்கு மக்கள் கரவொலி எழுப்பி கௌரவம் செலுத்தினார்கள். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிரம்பி வழியும் அந்த காட்சிகளை வீடியோவில் காணும்போது நமக்கே புல்லரித்துப்போவதை தவிர்க்க இயலவில்லை!