இறுதிப் போட்டியில் வெற்றி பெற இது உத்வேகமாக இருந்தது: இலங்கை கேப்டன் ஷனகா
லீக் போட்டிகளில் சில தவறுகளை செய்தோம், ஆனால் இறுதிப் போட்டியில் நூறு சதவீத உழைப்பை கொடுத்தோம் - ஷனகா
இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வாளர்களுக்கு நன்றி தெரிவித்த இலங்கை கேப்டன்
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியின் உத்வேகம் உதவியாக இருந்ததாக இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. போட்டிக்கு முன்பாக பேசியிருந்த இலங்கை கேப்டன் ஷனகா, நாணய சுழற்சியில் வெற்றி பெறுவது முக்கியம் என தெரிவித்திருந்தார். ஏனெனில் இந்த மைதானத்தில் இரண்டாவதாக துடுப்பாட்டம் செய்த அணிகளே அதிக முறை வெற்றி பெற்றிருந்தன. எனினும் தங்கள் வீரர்கள் திறமையானவர்கள் முதலில் துடுப்பாட்டம் செய்தாலும் வெற்றி பெறும் நம்பிக்கை இருப்பதாக ஷனகா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கோப்பையை வென்ற பிறகு பேசிய அவர், 'பார்வையாளர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். 2021-ம் ஆண்டு இதே துபாய் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. சென்னை அணி முதலில் ஆடி வெற்றி பெற்றது. அது எனது மனதில் இருந்தது. எங்கள் வீரர்களுக்கு நிலைமை நன்றாகவே தெரியும்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ' ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகு வணிந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சாமிகா, தனஞ்செய நன்றாக துடுப்பாட்டம் செய்தனர். ஒவ்வொரு வீரரும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்கள். அப்படித்தான் சாம்பியன் ஆனோம்.
லீக் போட்டிகளில் சில தவறுகளை செய்தோம், ஆனால் இறுதிப் போட்டியில் நூறு சதவீத உழைப்பை கொடுத்தோம்.
வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு இந்த பெருமை சேரும். இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.