ஆண்டுக்கு ரூ 16 கோடி சம்பளத்தை உதறித்தள்ளிய ஷேன் வாட்சன்: ஒரே ஒரு காரணம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ரூ 16 கோடி சம்பளத்தில் இணையவிருந்த ஷேன் வாட்சன் தற்போது அதை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்பந்தம் கசிந்தது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்துடன் தாம் முன்னெடுத்த ஒப்பந்தமானது அங்குள்ள செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கசிந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் ஷேன் வாட்சன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் தங்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் ஷேன் வாட்சன் மற்றும் மேற்கிந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டேரன் சமி ஆகிய இருவரையும் நாடியுள்ளது.
ஆனால் ஏற்கனவே தாம் மேற்கிந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பதாக குறிப்பிட்டு டேரன் சமி பாகிஸ்தான் அணியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். வாட்சன் தரப்பில் சாதகமான பதில் அளிக்கப்பட்டுள்ளதுடன், பொறுப்பை ஏற்க சில நிதி மற்றும் பிற நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
அதை ஏற்கும் நிலையில் பாகிஸ்தான் அணி நிர்வாகமும் இருந்துள்ளது. இந்த நிலையிலேயே, தரவுகள் ஊடகங்களில் கசிந்துள்ளதை குறிப்பிட்டு ஆண்டுக்கு ரூ 16 கோடி (2 மில்லியன் அமெரிக்க டொலர்) சம்பளத்தை உதறிவிட்டு, சனிக்கிழமை வீட்டுக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.