இந்தியன்-2 சிக்கலில் இருந்து விடுபட்ட இயக்குநர் ஷங்கர்!
இயக்குநர் ஷங்கர் இறுதியாக இந்தியன் 2 மற்றும் அதன் தயாரிப்பாளர்களான லைகா புரொடக்ஷன்ஸின் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளார்.
நிலுவையில் உள்ள இந்தியன்-2 திட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்பு வேறு எந்த படத்தையும் இயக்க அனுமதிக்க கூடாது என்று கோரி இயக்குநர் ஷங்கர் மீது லைகா புரொடக்ஷன்ஸ் வழக்கு பதிவு செய்தது.
அப்படி அவர் மற்றொரு படத்தை இயக்க விரும்பினால், இதுவரை இந்தியன் 2-க்காக செலவிடப்பட்ட பட்ஜெட் ரூ. 170 கோடியை நஷ்ட ஈடாக கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டது.
இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் லைக்கா புரொடக்ஷன்ஸின் அனைத்து கோரிக்கைகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனால், ஷங்கர் மற்றொரு படத்தை இயக்கலாம், மேலும் நஷ்ட ஈடாக பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இந்தியன்-2 திரைப்படம் வெவ்வேறு வடிவத்தில் சிரமங்களை எதிர்கொள்கிறது. இறுதியில், இது இயக்குநருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தியது.
'உலக நாயகன்' கமல் ஹாசன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் எதிர்காலத்தில் எப்போதாவது மீண்டும் தொடங்கப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும்.
சட்ட சிக்கல்களில் இருந்து ஷங்கர் விடுபடுவதால், புதிய திட்டங்களைத் தொடங்க அவர் தயாராகி வருகிறார். அவர் ஏற்கனவே ராம் சரணுடன் ஒரு படத்தையும், ரன்வீர் சிங்குடன் மற்றொரு படத்தையும் அறிவித்தார். முதலில் எது தொடங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.