ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த நபர்: பணத்துக்காக செய்த பயங்கர செயல்
வீட்டு வேலை செய்துவந்த பெண்ணொருவர் தன் வீட்டில் உயிரிழந்துகிடந்த நிலையில், பொலிஸ் விசாரணையில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வீட்டில் உயிரிழந்துகிடந்த பெண்
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள தெற்கு மும்பையில், வீட்டு வேலை செய்துவந்த ஜோதி பவார் (55) என்னும் பெண் நேற்று காலை வேலைக்கு வராததால், அவரது மகளை அழைத்து விசாரித்துள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர்.

மும்பையின் புறநகர்ப்பகுதியிலுள்ள Borivali என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த அந்தப் பெண், மலபார் ஹில் என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த தன் தாயைத் தேடிச் சென்றுள்ளார்.
பலமுறை அழைத்தும் தன் தாய் கதவைத் திறக்காததால் அக்கம்பக்கத்திலுள்ளவர்களை அவர் அழைக்க, அவர்கள் வந்து கதவை உடைத்துத் திறந்துள்ளார்கள்.
அப்போது, ஜோதி வீட்டுக்குள் உயிரிழந்துகிடப்பது தெரியவரவே, பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
திடுக்கிடவைக்கும் தகவல்கள்
ஜோதி கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்துகொண்ட பொலிசார், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளைப் பார்வையிடும்போது, அதே பகுதியில் வாழும் கைஃப் ஷேக் (23) என்னும் நபர் ஜோதி வீட்டுக்கு வந்தது தெரியவரவே, அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர் பொலிசார்.

விசாரணையில், ஷேர் மார்க்கெட்டில் எக்கச்சக்கமான பணத்தை இழந்த கைஃப், பணத்துக்காக, ஜோதியின் தங்கச் சங்கிலியைத் திருடச் சென்றது தெரியவந்தது.
சங்கிலியைப் பறிக்கும்போது ஜோதி எதிர்த்துப் போராட, அவரது கழுத்தை நெறித்துக் கொன்ற கைஃப், அந்த தங்கச் சங்கிலி மற்றும் ஜோதியின் மொபைலுடன் அங்கிருந்து தப்பியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள கைஃபிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |