ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை
Sharp Objects Found in Halloween Candy in Germany: ஜேர்மனியில் சிறுவர்கள் சேகரித்த ஹாலோவீன் மிட்டாய்களில் கூர்மையான ஊசிகள் மற்றும் திருகுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் கூர்மையான ஊசி
ஜேர்மனியில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்காக சிறுவர்கள் சேகரித்த மீட்டாய்களுக்குள் கூர்மையான ஊசிகள் மற்றும் சிறிய திருகுகள் போன்ற ஆபத்தான உலோகப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜேர்மன் காவல்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் ஹாலோவீன் மீட்டாய்களுக்கு இந்த கூர்மையான பொருட்கள் திட்டமிட்டு வைக்கப்பட்டு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் பாடன் வூர்ட்டம்பெர்க், பவேரியா, லோயர் சாக்சனி, ரைன்லேண்ட் பாலைட்டினேட் மற்றும் துரிங்கியன் ஆகிய ஜேர்மனியின் பல மாகாணங்களில் பதிவாகியுள்ளது.
அசம்பாவிதத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள்
நியூரம்பெர்க் நகரில் ஊசி மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்லேட் ஒன்றை சாப்பிட்ட சிறுவன் நல்வாய்ப்பாக எந்தவொரு காயமின்றி தப்பினார்.
இதைப்போல பாடன்-வூர்ட்டம்பெர்க் மாகாணத்தில் நடந்த இருவேறு சம்பவங்களிலும் சாக்லேட்டின் உள்ளே யாருக்கும் தெரியாத வகையில் ஊசி மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
சிறுவர்களை கொடூரமாக தாக்க முயன்று மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து விசாரணையானது தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.