உலகக்கோப்பைக்கான இந்திய அணி இது கிடையாது! இனி அவ்ளோ தாங்க... சேவாக் அதிரடி கருத்து
இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமாக ஆடி வரும் நிலையில் இனி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பது போல சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது தனது முதல் 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 151 ரன்கள் குவித்தும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 110 ரன்கள் மட்டுமே அடித்ததால் நியூஸிலாந்து அணி அதனை எளிதாக சேஸிங் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி மீண்டும் ஒருமுறை வீழ்த்தியது.
இப்படி இரண்டு தோல்விகளின் காரணமாக தற்போது இந்திய அணி முடங்கி உள்ளது. மேலும் இனி வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறிதான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது குறித்து வெளிப்படையான தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்திய அணியை நியூசிலாந்து தொடர்ச்சியாக நான்காவது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் வீழ்த்தி உள்ளது.
அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இனிவரும் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாது என்று தான் கருதுகிறேன்.
இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணி இது கிடையாது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நமீபியா விளையாடியதை போன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது என்றும் அவர் தனது காட்டமான கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.