கோலி ரசிகர்களை ஏமாற்றினார்! அவரது மொத்த கிரிக்கெட் வாழ்க்கையில்... விளாசிய சேவாக்
ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேறிய நிலையில் அந்த அணியின் வீரர் விராட் கோலியை விமர்சித்துள்ளார் ஜாம்பவான் வீரேந்திர சேவாக்.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் பெங்களூருவும் ஒன்று.
தொடக்க முதலே சிறப்பாக விளையாடி வந்த அந்த அணி, இடையில் தடுமாடினாலும், இறுதியில் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது. வெளியேறுதல் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, ராஜஸ்தானுடன் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் தோல்வியடைந்து, வெளியேறியது.
இந்த தொடரில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இந்த தொடரில் அவர் ரன்கள் எடுக்க தடுமாறினார் . 2வது தகுதி சுற்று போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .
இந்நிலையில் விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது; நீங்கள் ஃபார்மில் இல்லாதபோது, ஒவ்வொரு பந்தையும் நன்றாக ஆட முயற்சிக்க வேண்டும். அப்படி ஆடினால் நம்பிக்கை வரும். ஆனால் ஃபார்மில் இல்லாத வீரர்கள் பந்தை விரட்டிச்சென்று ஆடுவார்கள். அதைத்தான் கோலியும் செய்தார்.
இது நமக்குத் தெரிந்த விராட் கோலி அல்ல; இந்த சீசனில் அவர் செய்த தவறுகளின் எண்ணிக்கை, அவரது மொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் செய்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் ரன்களை எடுக்காதபோது, நீங்கள் வெவ்வேறு விஷயங்களைச் செய்ய முயற்சி செய்கிறீர்கள். இந்த சீசனில் விராட் கோலி அனைத்து விதமான முறையில் ஆட்டமிழந்துள்ளார் . கோலி அவரது ரசிகர்களையும் பெங்களூரு அணி ரசிகர்களையும் ஏமாற்றினார் என தெரிவித்துள்ளார்.