நடிகர் பிரபு, ராம்குமாரின் நடவடிக்கைக்கு தடை கோரிய சகோதரிகள்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாந்தி தியேட்டரை விற்பனை நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.
சிவாஜி கணேசன் மகள்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
சொத்து விவகாரம் தொடர்பில் நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான ராம்குமார், நடிகர் பிரபு ஆகியோர் ஏமாற்றி விட்டனர். எனவே குடும்ப சொத்துகளை தங்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை, சாந்தி தியேட்டர் உள்ளிட்ட சொத்துகளின் விற்பனை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சாந்தி, ராஜ்வி ஆகியோர் சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த போது அனைத்து சொத்துக்களிலும் மனுதாரர்கள் இருவருக்கும் சமபங்கு உள்ளது. சாந்தி தியேட்டர் பங்கு மற்றும் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்க மனுதாரர்கள் வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்குமார், பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், தடை விதிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சாந்தி தியேட்டர் விற்பனை நடவடிக்கைக்கு தடை கேட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும் கூடுதல் மனுக்கள் மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.