சடலங்களாக மிதந்த புலம்பெயர்ந்தோர்: மீன் பிடிக்கச் சென்ற பிரெஞ்சு மீனவர்கள் கண்ட அதிரவைக்கும் காட்சி
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து ஆபத்தான வகையில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புலம்பெயர்வோர் பயணம் செய்வதில் உள்ள அபாயங்கள் நிதர்சனமாகியுள்ளன.
பார்ப்பதற்கு அமைதியாக தோன்றும் ஆங்கிலக்கால்வாயும் அபாயமானதே என நிரூபித்துள்ளது நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்து ஒன்று.
ஆம், பிரான்ஸ் உள்துறை அமைச்சரின் கூற்றுப்படி, சிறிய ரப்பர் படகு ஒன்றில், 34 புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக் கால்வாயில் பிரித்தானியாவை நோக்கிப் பயணித்துள்ளார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி பிரித்தானியாவைச் சென்றடையவில்லை.
ஆம், மதியம் 1 மணியளவில் Calais துறைமுகத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பிரெஞ்சு மீனவர்கள் சிலர், தண்ணீரில் உயிரிற்ற உடல்கள் மிதப்பதைக் கண்டு பதறி, உடனடியாக உதவிகோரி ரேடியோவில் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அதை பிரித்தானிய பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த Doverஐச் சேர்ந்த மீனவரான Matt Cocker கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.
பலர் தண்ணீரில் கிடப்பதாக பிரான்ஸ் நாட்டு கடலோரக் காவல் படையை பிரெஞ்சு மீனவர்கள் எச்சரிக்க, உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் 15 முதல் 20 பெரிய வர்த்தக மீன் பிடி படகுகள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனவாம். ஆனால், அவை எதுவும் உதவிக்கு வரவில்லை என்கிறார் Mr Cocker.
அதன்பின், Doverஇலிருந்து கடலோர பாதுகாப்புப் படைக்கு சொந்தமான படகுகள், எல்லை பாதுகாப்புப் படையினரின் கப்பல் ஒன்று ஆகியவை சம்பவ இடத்தை அடைய 45 நிமிடங்கள் ஆகியிருக்கிறது.
பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான மூன்று ஹெலிகொப்டர்களும் உதவிக்கு விரைந்துள்ளன.
ஆனால், இருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்திருக்கிறது. பெண்கள், ஒரு சிறுமி உட்பட 27 பேர் சடலங்களாகத்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், பிரான்ஸ் தரப்பு ஜேர்மனி மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. கடத்தல்காரர்கள் ஜேர்மனியிலிருந்து ரப்பர் படகுகள் வாங்கி அவற்றை பிரான்சுக்குக் கொண்டுவருவதைத் தடுக்க ஜேர்மன் அரசு தவறுவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படியே, பிரித்தானியா பிரான்சையும், பிரான்ஸ் பிரித்தானியாவையும், ஜேர்மனியையும் என மாறி மாறி ஒவ்வொரு நாடும் மற்றவர்களைக் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், புலம்பெயர்வோர் பரிதாபமாக பலியாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சோகம்.